Thursday, March 9, 2017

10ம் வகுப்பு தேர்வில் மீண்டும் திருக்குறள்!

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வில், இந்த ஆண்டு திருக்குறள் இடம் பெற்றுள்ளது. நமது நாளிதழ் செய்தி எதிரொலியாக, இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு, தமிழகம், புதுச்சேரியில், 3,371 மையங்களில், நேற்று துவங்கியது. இதில், 10.38 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தமிழ் முதல் தாள் தேர்வில், வினாக்கள் எளிமையாக இருந்ததாக, மாணவர்களும், ஆசிரியர்களும் தெரிவித்தனர். 

மொத்தம், 100 மதிப்பெண்ணுக்கு, 49 வினாக்கள் இடம் பெற்றன. இந்த ஆண்டு, தலா எட்டு மதிப்பெண்களுக்கான, இரண்டு நெடுவினாவில், ’சாய்ஸ்’ என்ற விருப்ப அடிப்படையில், நான்கு வினாக்கள் இடம் பெற்றன. இதில், 47வது வினாவாக, திருக்குறளின், ஒழுக்கமுடைமை குறித்த வினா இடம் பெற்றது.

இன்னொரு, ’சாய்ஸ்’ கேள்வியில், செம்மொழிக்கான ஐந்து தகுதிகள் கேட்கப்பட்டிருந்தன. கடந்த ஆண்டு, தமிழ் முதல் வினாத்தாளில், திருக்குறள் புறக்கணிக்கப்பட்டதால், பல மாணவர்கள், தமிழில் தேர்ச்சி பெற முடியாமல் பாதிக்கப்பட்டனர். 

இது குறித்து, நமது நாளிதழில் விரிவாக செய்தி வெளியானதை தொடர்ந்து, வினாத்தாள் உருவாக்கும் ஆசிரியர்களுடன், தேர்வுத்துறை ஆலோசனை நடத்தியது; திருக்குறள் கண்டிப்பாக இடம்பெற உத்தரவிட்டது.

இது குறித்து, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி, இளங்கோ கூறுகையில், ”தமிழ் முதல் வினாத்தாள் எளிமையாக இருந்ததால், மாணவர்கள் முழு மதிப்பெண் எடுக்க முடியும். 

கடந்த ஆண்டு இடம்பெறாத திருக்குறள் கேள்வியும், உரைநடை கேள்வியும், மாணவர்களுக்கு, 16 மதிப்பெண்கள் பெற வழி வகுத்துள்ளது,” என்றார்.

No comments:

Post a Comment