Thursday, July 30, 2015

10-ம் வகுப்பு மாணவர்களின் முழு விவரங்களை பள்ளி அளவில் தயாரிக்க அரசு தேர்வுத்துறை உத்தரவு


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிகழாண்டில் 10ம் வகுப்பு தேர்வு எழுத இருக்கிற மாணவ, மாணவிகளின் முழு விவரங்களையும் பள்ளி அளவில் தயார் செய்து அனுப்பி வைக்குமாறு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குநர்(பொறுப்பு) வசுந்தராதேவி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
நிகழாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10-ம் வகுப்பு தேர்வு எழுத இருக்கிற மாணவ, மாணவிகள் பற்றிய முழுவிவரங்கள் தயாரிக்கும் பணி அந்தந்த பள்ளிகளில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதற்கு முன்பு வரையில் மாணவ, மாணவிகளின் பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்கள் மட்டும் தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. அதிலும், தகப்பனாரின் முதல் எழுத்து மற்றும் பிறந்த தேதி ஆகியவை தவறாக குறிப்பிடவும் நேர்ந்தது.
எனவே இதுபோன்ற தவறுகளை தவிர்க்கும் வகையில், தற்போது கூடுதல் விவரங்களுடன் தயார் செய்யப்பட இருக்கிறது. இத்தேர்வு எழுத இருக்கிற மாணவ, மாணவிகளின் முழுவிவரங்களையும் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் தயார் செய்யப்பட இருக்கிறது. இதில், 10ம் வகுப்பு படித்து வருகிறவர்களின் பெயர், பெற்றோர் மற்றும் பாதுகாவலர் விவரம், மதம், இனம், பிறந்த தேதி, மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் விவரம், ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் உள்ளிட்ட முழு விவரங்களையும் விண்ணப்பத்தில் கட்டாயம் குறிப்பிட வேண்டும. ஆதார் எண் இல்லாதவர்கள் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. இப்பணியை இம்மாதம் 30ம் தேதி தொடங்கி, ஆக.30-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
வகுப்பறையில் ஆசிரியர்கள் பூர்த்தி செய்ததை, தலைமை ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும். அதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர் ஆகியோரை பள்ளிக்கு வரவழைத்து விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்து கையொப்பமிட வேண்டும். இதில், 2016ல் தேர்வு எழுத இருக்கிற மாணவ, மாணவிகள் கட்டாயம் 14 வயதை பூர்த்தி அடைந்தவராக வேண்டும். இதை குறிப்பிட்ட நாள்களுக்குள் தயார் செய்து அதன் விவரங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம், தேர்வு துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.