Friday, March 27, 2015

பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாளில் கிடுக்கிப்பிடி வினாக்கள்: காப்பியடித்த மாணவர்கள் 74 பேர் சிக்கினர்
பத்தாம் வகுப்பு ஆங்கிலம், முதல் தாள் தேர்வில், சில கேள்விகள் கிராமப்புற மாணவர்களுக்கு கிடுக்கிப்பிடியான கேள்விகளாகவும், நகர்ப்புற மெட்ரிக் மாணவர்களுக்கு எளிமையாகவும் இருந்தன. தேர்வில், நான்கு மாணவர் உட்பட, 74 பேர் முறைகேட்டில் சிக்கினர்.
பாடப் புத்தகத்தில்:
பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாளில், 100 மதிப்பெண்களுக்கு, 53 வினாக்கள் தரப்பட்டன. பெரும்பாலான கேள்விகள் பாடப் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டிருந்தன. ஒரு மதிப்பெண் வினாக்கள், பாடப் புத்தகத்தின் உள்பகுதியில் இருந்தும், பாடத் திட்டத்தின் படி மாற்றியும் கேட்கப்பட்டிருந்தன. ஐந்தாவது வினாவில், 'சி.ஓ.டி., - காட்' என்ற பிரிட்டிஷ் ஆங்கில சொல்லுக்கு, இணையான அமெரிக்கன் ஆங்கில சொல் கேட்கப்பட்டிருந்தது. இதை கிராமப்புறமாணவர்களால் சரியாக எழுத முடியவில்லை. இதேபோல், 19, 20, 21, 22, 42 மற்றும், 43வது கேள்விகள், மாணவர்களுக்கு குழப்பமாக இருந்தன. மேலும்,'இடம் பெற்றுள்ள பிழைகளை சரி செய்' என்ற, 52வது வினாவும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கடினமாக இருந்தது. மெட்ரிக் மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வி கற்றுள்ளதால், அவர்களுக்கு எளிமையாக இருந்ததாக தெரிவித்தனர். மேலும், 53வது வினாவில், போக்குவரத்து விதிமீறல் குறித்து படம் ஒன்றைக் கொடுத்து, ஐந்து கேள்விகள் இடம் பெற்றன. ஒரு கேள்வியில், எத்தனை வகை வாகனங்கள் படத்தில்தெரிகிறது என, கேட்கப்பட்டிருந்தது. படத்தில் கார், ஆட்டோ, மோட்டார் பைக் மற்றும் மொபட் வகை வாகனங்கள் இருந்தன.
மதிப்பெண் தர வேண்டும்:
விடையில், இருசக்கர வாகனத்தின் இரு வகைகளும் குறிப்பிட வேண்டுமா அல்லது அனைத்தை யும் ஒரே வகையாக குறிப்பிட வேண்டுமா என்ற குழப்பம் இருந்ததாகவும், இதில் எப்படி குறிப்பிட்டாலும் மதிப்பெண் தர வேண்டும் என்றும், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்றைய தேர்வில், 74 பேர் காப்பியடித்து பிடிபட்டனர். நான்கு பேர் மாணவர்; 70 பேர் தனித்தேர்வர்கள். அதிகபட்சமாக கடலூரில், 43 தனித்தேர்வர்கள் பிடிபட்டனர்.

No comments:

Post a Comment